Pages

Thursday, 5 November 2020

கரிகால் சோழனின் வரலாறு

 கரிகால் சோழனின் வரலாறு 

சங்ககால இலக்கிய நூல்களில், பெருவளத்தான் (அல்லது) திருமாவளவன் (அல்லது) கரிகால் வளவன் என குறிப்பிடப்படும், கரிகால சோழன் (அல்லது) கரிகால பெருவளத்தான், முற்காலச் சோழர்களில் தனது போர் திறமைகளினாலும், கட்டிட கலைகளினாலும் நன்கு அறியப்படுபவர் ஆவார்.

பெயர் விளக்கம்:-

விளக்கின் தீபம் கரிய மைய பகுதியை திரியில் கால் போன்று உண்றி எரியும் அந்த நெருப்பே கரிகாலன் .

திருமால் அரிமா (நரசிம்ம அவதாரம்) போர் (அமளி) மேற்கொண்டான் - திருமாவளவன்

இவர் மனுநீதிச் சோழன் (அல்லது) எல்லாளன் வழி வந்தவர் என்று கூறப்படுகிறது. இவரது தந்தை இளஞ்சேட்சென்னி, பூம்புகார் என்னும் காவேரி சமவெளியுனுள் அமைந்துள்ள, ஒரு குறு நிலத்தை ஆட்சி செய்த மன்னர் ஆவார்.

கரிகால சோழன் தன் தாய் வயிற்றில் இருந்த போதே, அவருடைய தந்தை இளம்சேட்சென்னி கொல்லப்பட்டார். இதனை பொருநராற்றுப்படையில், 143–148 ஆம் வரிகளின் மூலம் அறிய முடிகிறது,

வெல்வேல்
உருவப் பல்தேர் இளையோன் சிறுவன்
முருகன் சீற்றத்து உருகெழு குருசில்
தாய்வயிற்று இருந்து தாயம் எய்தி

- பொருநர்: 129-132

இரும்பனம் போந்தைத் தோடும் கரும்சினை
அரவாய் வேம்பின் அம்குழைத் தெரியலும்
ஓங்குஇரும் சென்னி மேம்பட மிலைந்த
இருபெரும் வேந்தரும் ஒருகளத்து அவிய
வெண்ணித் தாக்கிய வெருவரு நோன்தாள்
கண்ஆர் கண்ணி 
கரிகால் வளவன்

- பொருநர்: 143-148

இம்மன்னன் இளஞ்சேட்சென்னி என்னும் அரசனுடைய மகன் என்பதனை ‘உருவப் பல்தேர் இளையோன் சிறுவன்’ எனவரும் அடி உறுதிசெய்கின்றது. இவன் தன்தாய் வயிற்றில் கருவாயிருந்த போதே இவன் தந்தை இறந்தான் என்பதனையும் தாய் வயிற்றிலிருந்த போதே அரசுரிமை பெற்றுப் பின்னர் பிறந்தான் என்பதனையும் பொருநராற்றுப்படை ‘தாய்வயிற்று இருந்து தாயம் எய்தி’ என்னும் அடியினால் பதிவுசெய்கின்றது.

அதைத் தொடர்ந்து கரிகால சோழன் பாதுகாப்பிற்காக நாட்டை விட்டு வெளியேறி, கரூர் என்னும் இடத்தில் சிறிது காலம் தங்கி இருந்தார். ஆனால் கரிகால சோழனுடைய அரசியல் எதிரிகள், ஆட்சியின் ஆசையினால், அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். அப்போது கரிகாலனுக்கு மிகவும் சிறிய வயதானதால் அவர்களை எதிர்த்து ஒன்னும் செய்ய இயலவில்லை. இருப்பினும் கரிகால சோழனின் செல்வாக்கு மக்கள் மத்தியில நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே இருந்தது. அதனால் கரிகால சோழனை கொல்ல நினைத்த, அவருடைய அரசியல் எதிரிகள் கரிகால சோழன் அடைக்கப்பட்டு இருந்த சிறைச்சாலைக்கு தீ வைத்தனர்.

பின்னர், அவரது மாமன் இருபிடர்தலையன் உதவியுடன் அங்கிருந்து தப்பித்து, பெரும் படையை திரட்டி எதிரிகளை தோற்கடித்து சோழ அரியசனத்தில் மன்னராக அமர்ந்தார். பின்னர் அவரது ஆட்சியை நன்றாக வேரூன்ற செய்வதற்கு முன்பே, கரிகால சோழனை தோற்கடித்து சோழ நாட்டை வெற்றி பெறும் நோக்கத்துடன் சேர மன்னரும், பாண்டிய மன்னரும் மற்றும் 11 குறுநில மன்னர்களும் ஒன்றாகச் சேர்ந்து ஒரே அணியாக பெரும் படை கொண்டு சோழ நாட்டின் மீது போர் தொடுத்தார்கள்.

இன்றைய வெண்ணி (இப்போதுள்ள கோவில்வெண்ணி) என்னும் இடத்தில் நடந்த அந்த போரில், உதியன் சேரலாதன் கரிகால் வளவனைத் தாக்கினான். அப்போது சிலர், அவனை முதுகுப்பக்கம் தாக்கினர். அதனால் “முதுகில் காயம் பட்டுவிட்டதே” என்று நாணிச் சேரலாதன் போர்க்களத்திலேயே தன் வாளை நிலத்தில் குத்தி வைத்துக்கொண்டு போரிடாமல் வடக்கு நின்று உயிர் நீத்தான்.

இந்த காட்சியினை, அகநானூற்றின் பாலை திணை பாடல் மூலம் நன்கு அறிய முடிகின்றது.

கரிகால் வளவனொடு வெண்ணிப் பறந்தலைப்
பொருது புண் நாணிய சேரலாதன்
அழி கள மருங்கின் வாள் வடக்கிருந்தென,

….

- அகநானூறு (055)

இந்த போர் கி.பி 130 காலக்கட்டத்தில் நடந்ததாக வரலாற்று ஆய்வாளர்களால் நம்பப்படுகிறது.

இந்த போர் கரிகால சோழரின் வாழ்க்கையில் மிகவும் ஒரு திருப்பு முனையாக அமைந்தது. சோழ அரசை ஒரு குறுநில அரசிலிருந்து விரிவு படுத்த எண்ணினார். பின் பல போர்களில் வெறியோடு போரிட்டு பாலக்காடு, திருவாங்கூர், கொச்சி, தென்/வடமலையாளம் ஆகிய பகுதிகளை கொண்ட சேர நாட்டையே தனது பேரரசின் ஆட்சிக்கு கீழ் கொண்டு வந்தான்.

பின்னர், தொண்டை நாட்டையும் கைப்பற்றி, அதன் மேல்சென்று வடக்கே வேங்கடம் என்னும் திருப்பதியையும் கைப்பற்றினார்.

அதன் பின் ஒரு பெரிய படையை திரட்டி, வடக்கு நோக்கி சென்று இமயம் வரை சென்று வந்தான் என்று சிலப்பதிகாரம் மற்றும் பெரியபுராணம் பாடல்களின் மூலம் தெரிகிறது,

இருநில மருங்கின் பொருநரை பெறாஅச்
செறுவெங் காதலின் 
திருமா வளவன்
வாளும் குடையும் மயிர்கண் முரசும்
நாளொடு பெயர்த்து நண்ணார்ப் பெறுகஇம்
மண்ணக மருங்கின்என் வலிகெழு தோள் எனப்
புண்ணிய திசை முகம் போகிய அந்நாள்

- சிலப்பதிகாரம் (84–94)

பொன்மலை புலி வென்று ஓங்கப்
புதுமளையிடுத்துப்
பொற்றும் அந்நெறி வழியேயாக
அயல் வழி அடைத்த சோழன்"

- பெரியபுராணம் 55

பின்னர் பெரும் கப்பற் படை கொண்டு, சிலோன் (இலங்கை) யும் கைப்பற்றினார். வரலாற்றின் பதிவுகளின் படி, இலங்கை முழுவதையும் வென்ற சில சோழ மன்னர்களில் கரிகால் வளவனும் ஒருவர்

பொது வாழ்க்கை:-

இவரது ஆட்சி காலம் குறித்த சரியான தகவல்கள் ஏதுவும் இதுவரையில் ஆதாரப்பூர்வமாக கிடைக்கவில்லை.

நாங்கூரைச் சேர்ந்த வேளிர் குலப்பெண் ஒருவரை கரிகாலன் மணந்தார் என்று நச்சினார்க்கினியர் அவரது காலத்தின் கூறப்பட்ட மரபுவழிச் செய்தியின் அடிப்படையில் கூறுகிறார். கரிகாற் பெருவளத்தான் அவரது வாழ்வின் இறுதியில் குராப்பள்ளி என்ற இடத்தில் தனது உலக வாழ்வை நீத்தார் என்பது தெரிகிறது.

இவருக்கு இரண்டு மகன்கள் (நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி), மற்றும் ஒரு மகள்(ஆதிமந்தி) இருந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.


No comments:

Post a Comment