இந்தியா முதல் எத்தியோப்பியா தேசம் வரைக்கும் ஆகாஸ்வேரு என்ற ராஜா ஆண்டதாக வாசித்தேன். அப்படியானால் கிமு 486-465 ஆண்டுகளில் இந்தியாவில் யூதர்கள் இருந்தார்களா? அக்காலத்திலே இந்தியாவில் யூத மரபு இருந்ததா? இந்தியர்களுக்கும் யூதர்களுக்கும் , தமிழர்களுக்கு தொடர்பிருக்கிறதா?
ஆம்.
இந்தியா முதல் எத்தியோப்பியா தேசம் வரைக்கும் ஆகாஸ்வேரு என்ற ராஜா ஆண்டதாக வாசித்தேன். அப்படியானால் கிமு 486-465 ஆண்டுகளில் இந்தியாவில் யூதர்கள் இருந்தார்களா?
முதல்ல இந்த கேள்விக்கான பதிலைப் பார்ப்போம். ஆம் இருந்தார்கள் என்பதே பதில். அதற்கு முன்னர் அகாஸ்வேரு மன்னன் யாரென்று பார்க்கலாம்…
அகாஸ்வேரு வரலாறு:
- அகாஸ்வேரு இமயம், கிரேக்கம் மற்றும் எகிப்தை உள்ளடக்கிய மாபெரும் நிலப்பரப்பை ஆண்டு வந்தான்.
- ஆட்சியின் ஆரம்பத்தில் எகிப்து மற்றும் பாபிலோனில் ஏற்பட்ட கிளர்ச்சிகளை நசுக்கிய பின்னர் தன் கவனத்தைக் கிரேக்க நாட்டைக் கைப்பற்றுவதில் திருப்பினான்.
- அவன் ஆயிரக் கணக்கான படைத் தளபத்தியங்களைக் கொண்டிருந்தான். அப்படைகளை அணிவகுத்து வருவதற்கே ஒரு வாரகாலமாவது ஆகும் என்று கூறப்படுகிறது.
- இன்றைய ஆசியாவுக்கும் ஐரோப்பாவிற்கும் இடையே பாலம் அமைக்கச் சொன்னது அவனின் பதவிப் பேராசையைக் காட்டுகிறது. அப்பாலம் சூறாவளிக் காற்றினால் இடிந்து போன போது, பரவியிருந்த நீர்நிலைகளை அகற்றச் சொல்லி அங்குள்ள நிலப் பரப்பில் இருப்புத் தூண்களை ஊன்றச் செய்தான். அப்பாலத்தைக் கட்டிய பொறியியலாளர்கள் கொல்லப்பட்டனர்.
- ஆரம்பத்தில் பல வெற்றிகளைப் பெற்று தேசங்களின் சொத்துகளைச் சூறையாடிக் குவித்தாலும், இறுதி காலக்கட்டப் படையெடுப்பு தோல்வியையே தழுவியது. இதனால் அவன் பாரசீகத்திற்குத் திரும்ப வேண்டியிருந்தது.
- அவனுடைய ராஜ்யம் வல்லமை வாய்ந்ததாக இருந்தாலும், ஆரம்ப காலத்தைப் போல் பிரகாசிக்கவில்லை. இக்காலக் கட்டத்தில் அவன் ராஜ்ய தந்திரங்களிலும் அந்தபுரக் கயவத்திலும் சிறப்புற்றுத் திகழ்ந்தான்.
- அணி ராபர்ட்ஸ் (Anne Roberts) என்பவர் அகாஸ்வேருவின் சிறப்பம்சங்களை ‘மலர்ச்சியின் விளக்குகள்’ (New Day Lights) (ஜன.-ஏப்ரல் 2008, பக்கம் 67) என்ற புத்தகத்தில் அறிமுகப்படுத்தியுள்ளார்.
- அதில், அவன் ஒரு கல்விமான்; உயரமானவன்; மிடுக்கும் கம்பீரமும் நிறைந்தவன்; வனப்பை ரசிப்பவன்; வேளாண்மையில் ஆர்வமுடையவன்; தன்னை மகிழ்விப்பவர்களுக்குத் தயாளத்தோடு அள்ளியள்ளி வழங்கும் வள்ளல் என்று அந்நூலில் கூறப்பட்டுள்ளது.
ஆற்றல்களும் சாதனைகளும்:
- பாரசீகத்தின் தலைசிறந்த ராஜாக்களில் ஒருவர்.
- இமயம் முதல் கிரேக்கம் மற்றும் எகிப்து தேசம் வரை அவன் ராஜ்யத்தை விரிவு படுத்தினான்.
- தனது ராஜ்யத்தில் குவிந்து கிடந்த செல்வத்தையும் ஆட்சியையும் மகிமையையும் பெருமைகளையும் மற்றவர்களுக்கு வெளிப்படுத்தினான்.
வேதாகம மேற்கோள்கள்: எஸ்தர் புஸ்தகத்தில் அவன் வரலாறு அறியப்படுகிறது.
அக்காலத்திலே இந்தியாவில் யூத மரபு இருந்ததா?
இதற்கான பதிலும் ஆம். அன்று மட்டுமல்ல இன்றும் கூட குறிப்பிடத்தகும் அளவில் இருப்பதாக அறிந்தேன். ஏராளமானோர் இஸ்ரேல் நோக்கி செல்வதாகவும் யூதர்களின் எண்ணிக்கை குறைவதாகவும் பாதிரியார் ஒருவர் கூறிக் கேட்டிருக்கிறேன்.
இந்தியர்களுக்கும் யூதர்களுக்கும் தொடர்பிருக்கிறதா?
இதற்கும் ஆம் என்பதே பதில். தற்போது நாம் இந்திய நாட்டில் இருப்பதால் இந்தியர்களுக்கு எனக் கூறுகிறேன். ஆனால் தமிழர்களுக்கும், யூதர்களுக்கும் தொடர்பிருக்கிறதா எனக் கேட்டிருந்தால் உறுதியாக எப்போதும் சொல்லலாம். இது குறித்து வேதாகமத்திலும் அரசன் சாலமனைப் பற்றி கூறப்படுகையில் உள்ளது.
ஆனால் நாம் பார்க்கப்போவது தமிழர் வாணிகத்தின் மூலம் எவ்வாறு உலகத்தோடு, யூதர்களோட, பாரசீகர்களோடு அரேபியர்களோடு தொடர்பிலிருந்தனர் என்பதைப் பற்றி.
தமிழர் கடல் வாணிகம்:
"நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி
வளிதொழில் ஆண்ட உரவோன் மருக
களியியல் யானைக் கரிகால் வளவ!"
என்கிறார், வெண்ணிப்பறந்தலைப் போரில் வெற்றி பெற்ற முதல் கரிகாலனைப் பாடிய, பெண்பாற்புலவர் வெண்ணிக்குயத்தியார்.
இந்த முதல் கரிகாலனுக்கு மிகமிக முன்னோனாகிய தமிழ் மன்னன் ஒருவன், காற்றைப் பயன்படுத்தி கப்பல் செலுத்தும் தொழில் நுட்பத்தைக் கற்று, நடுக்கடல் ஊடே கப்பலோட்டிச் சென்றவனாதலால், அது போன்ற புகழ் பெற்ற பரம்பரையில் வந்தவனே என முதல் கரிகாலனை வெண்ணிக்குயத்தியார் புகழ்ந்து பாடுகிறார்.
விம்பகம்: சீனா முதல் ரோம் வரையான பண்டைய வாணிகம் நடைபெற்ற நாடுகள் இதில் தரப்பட்டுள்ளன.
- தமிழர் கடல் வணிகம் என்பது இந்தோனேசியத் தீவுகளில் இருந்து தமிழகம் வழியாக பாரசீக வளைகுடா வரையில் கடற்கரை ஓரமாக மட்டுமே நடந்து வந்தது. பின்னரே அது நடுக்கடல் வணிகமாக பரிணமித்தது.
- அதன் பின்னரே அது மேற்கே எகிப்துக்கும், ரோமுக்கும் கிழக்கே சீனா வரையிலும் பரவியது.
- தமிழர்கள் ஆரம்பகாலம் முதல் மிக நீண்டகாலம் வரை, இந்தோனேசியத் தீவுகளுக்கும் பாரசீக வளைகுடா நாடுகளுக்கும் மட்டுமே சென்று வந்தனர். அரேபியர்களே தமிழகம், இலங்கை, தென்கிழக்கு ஆசிய நாடுகள் ஆகியவைகளின் பொருட்களை முக்கியமாக, வாசனைப் பொருட்களையும், வாசனைத் திரவியங்களையும் தமிழர்களிடம் இருந்து பெற்றுக் கொண்டு, மேற்குலக நாடுகளுக்கு விநியோகித்தனர்.
- தமிழர்கள் கிழக்கு ஆப்பிரிக்காவரை சென்று (சொமாலியா) வணிகம் செய்தனர். தமிழர்கள் மிக பழங்காலத்தில் இருந்தே, அந்தந்த நாடுகளில் தங்கி இருந்து வணிகம் செய்து வந்தனர்.
- மேலே வரைபடத்தில் உள்ள பாரசீகம்(Persia) என்ற இடத்தில்தான் சுமேரியா, அசீரியா, பாபிலோனியா, பாரசீக நாகரிகங்கள் தோன்றி வளர்ந்தன.
- மேலே வரைபடத்தில் உள்ள ஜாவா(Java) என்ற இடத்தின் அருகே தான் வாசனைத் தீவும்(மொலுக்கஸ்), இன்னபிற தென்கிழக்கு ஆசிய நாடுகளும் உள்ளன.
- பண்டைய மேற்கு தமிழகத்தில்(கேரளா), இன்றைய கொச்சி அருகே, அன்று இருந்த முசிறியும், இன்றைய மும்பாய் அருகே அன்று இருந்த பாரிகாஜாவும்(Barygaza) வரைபடத்தில் தொட்டுக் காட்டப்பட்டுள்ளன
- கி.மு. 7 ஆம் நூற்றாண்டுக்கு மிக நீண்டகாலம் முன்பிருந்தே தமிழர்கள், அரேபியர்கள் மற்றும் யூதர்கள் மூலம் மெசபடோமியப் பகுதிகளுக்கும், கிழக்கு ஆப்பிரிக்காவுக்கும், எகிப்துக்கும், பாலஸ்தீனத்துக்கும், கிழக்கே சீனா வணிகம் செய்து வந்தனர் எனலாம்.
பழைய ஏற்பாட்டின் அடிப்படையில் …
- யூதர்களின் ஆதிசமயத் தலைவரான மோசஸ்(MOSES), தாம் நிகழ்த்திய இறை வழிபாட்டில் வாசனைப் பொருட்களையும், வாசனைத் திரவியங்களையும் மிக அதிக அளவில் பயன்படுத்தினார் என பழைய ஏற்பாடு தெரிவிக்கிறது.
- மோசஸ் கோயில் கட்டி வழிபாடு செய்த ஆண்டு கி.மு. 1490 ஆகும். மோசஸ் அவர்கள் கடவுளுக்கு அர்ப்பணிக்க வேண்டிய தங்கம் முதலான பொருட்களோடு, இறுதியாக வாசனைப் பொருட்களையும், வாசனைத் திரவியங்களையும் குறிப்பிடுகிறார்.
- மேலும் வாசனைத் திரவியங்களை எப்படி ஒன்றிணைக்க வேண்டும் என்றும், அந்த புனிதமான வாசனைத் திரவியங்களைக் கொண்டு எந்தெந்த பொருட்களை புனிதப் படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கிறார்.
- குருமார் மற்றும் அவரது புதல்வர்களைக்கூட இந்த வாசனைத் திரவியங்களைக் கொண்டே புனிதப்படுத்த வேண்டும் என்கிறார் மோசஸ். (ஆதாரம்: 1. பழைய ஏற்பாடு- EXODUS, 35: 4-9, 37: 29 & 40: 9-15. 2. தமிழக வரலாறு: மக்களும் பண்பாடும்- டாக்டர் கே.கே. பிள்ளை பக்: 50,51).
- ஆக கி.மு. 15ஆம் நூற்றாண்டில், வாசனைப் பொருட்களையும், வாசனைத் திரவியங்களையும் மிகச்சிறந்த புனிதப் பொருட்களாக யூதர்களின் சமயத்தலைவரான மோசஸ் கருதி, அவைகளை அன்றே பெருமளவு பயன் படுத்தியுள்ளார் என்பதை பழைய ஏற்பாடு மிகத் தெளிவாகவும் மிக விரிவாகவும் குறிப்பிடுகிறது.
- கி.மு. 1000 வாக்கில், இஸ்ரேலை ஆண்ட சாலமன்(SSOLOMON) மன்னனுக்கு தென் அரேபிய நாட்டு அரசி சேபா(SHEBA), மிக அதிக அளவான வாசனைப் பொருட்களையும், வாசனைத் திரவியங்களையும், தங்கத்தையும், மதிப்புமிக்க கற்களையும் பரிசாக வழங்கினார்.
- மூன்று வருடங்களுக்கு ஒரு முறை டயர் நாட்டு மன்னன் கிராம்(HHIRAM) அவர்களின் கப்பல்களுடன், சாலமனின் தார்சிஸ்(TARSHISH) கப்பல்களும் சேர்ந்து ஒபீர்(OOPHIR) துறைமுகம் சென்று நிறைய தங்கத்தையும், அகில் மரங்களையும், மதிப்புமிக்க கற்களையும், வெள்ளி, குரங்குகள், மயில்கள், தந்தங்கள், முதலியனவற்றையும் கொண்டு வந்தன ( ஆதாரம்: பழைய ஏற்பாடு-KINGS 1, 9:27,28, & 10:2,10,11,22,25).
- சாலமன் மன்னனுக்கு வந்து சேர்ந்த பண்டங்களில் பல தமிழ்ப் பெயர்களின் சிதைவுகளே என்கிறார் கே.கே.பிள்ளை அவர்கள்.
- உதாரணம்:
- துகிம்- தோகை, மயில்தோகை
- ஆல்மக் மரங்கள்- அகில் மரங்கள்
- கஃபி- கவி, (பழந்தமிழில் கவி என்பது குரங்கு என பொருள்படும்).
முதலியன ஆகும்(தமிழக வரலாறு: மக்களும் பண்பாடும்- பக்: 50,51).
- பாண்டிய நாட்டின் தலைநகராய், துறை முகமாய் கடலைத் தொட்டுக் கொண்டிருந்த கொற்கை நகரம் இப்போது கடலிலிருந்து ஏழு மைல் தூரத்தில் உள்நாட்டுப் பகுதியில் அமைந்துள்ளது.
- ஓஃபிர் அல்லது உவரி இவ்வூரின் பகுதியாகும். (எங்க ஊர் தாங்க… எனக்கு சின்ன வயசுல மொட்டை கூட எனக்கு இங்க தான் போட்டாங்களாம்)😜
- இப்போதும் இதே பெயரில் இங்கிருக்கும் மீனவர் கிராமத்தில் மணல் மேடுகள் உள்ளன. இம் மணல மேடுகள் ஒரு காலத்தில் தங்கச் சுரங்கங்களாய் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. மழை பெய்தபின்னர் கிராமவாசிகள் அங்கு சென்று தங்கப் பொடியைப் பொறுக்குகின்றனர் என்கிறார் நரசய்யா அவர்கள்.( கடல் வழி வணிகம், பக்:63.)
- ஆக சாலமன் மன்னனுக்கு வந்த பொருள்களில் பல பெயர்கள், தமிழ்ப் பெயர்களின் சிதைவுகளாக இருப்பதும், ஒஃபீர் (அ) உவரி என்ற பகுதி இன்றும் கொற்கைத் துறை அருகே இருப்பதும் கவனிக்கப்பட வேண்டிய தரவுகளாகும்.
- கால்டுவல், மேனாட்டார் மயிலுக்கு பயன்படுத்தும் துகி என்ற சொல் தோகை என்ற தமிழ் சொல்லிலிருந்து வந்தது எனவும், இது உவரித்(OOPHIR) துறைமுகத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டது எனவும் இதற்கு பழைய ஏற்பாட்டில் ஆதாரம் உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்(திருநெல்வேலியின் சரித்திரம், பக்:23). இங்கு உவரித்துறைமுகம் என கொற்கையைக் கால்டுவல் குறிப்பிடுகிடுறார்.
- தஞ்சைத் தமிழ் பல்கலைக்கழகம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கல் நங்கூரம் ஒன்றினை தமிழகத்தின் குருசேடைத் தீவில்(CRUSADAI ISLAND) இருந்து கைப்பற்றியுள்ளது. சிசிலியைச்(SSICILY) சேர்ந்த வல்லுநர்கள் இதனை ஆராய்ந்து இந்நங்கூரம் பர்சியன்(PPERSIAN) வகையைச் சேர்ந்தது எனவும் இதன் காலம் கி.மு. 1000 எனவும் குறிப்பிட்டுள்ளனர் (TAMILS HERITAGE-102) .
- இஸ்ரேலை ஆண்ட சாலமனின் காலம் கி.மு. 1000. ஆகவே அதே கால கட்டத்தைச் சேர்ந்த கல் நங்கூரம் தமிழகத்தில் கிடைத்திருப்பது என்பது முக்கியத்துவம் பெறுகிறது.
- கி.மு. 1000 அல்லது அதற்கும் சற்று முற்பட்ட காலகட்டத்தில் தொடங்கி கி.மு. 500 ஆண்டளவில் நன்கு மிளிர்ந்து படிப்படியாக பல்வேறு நிலைகளில் தமிழர் நாகரிகம் உயர்நிலையை அடைந்தது என்கிறார் தொன்மைத் தமிழகத்தின் செங்கடல் வணிகத்தொடர்பு என்ற கட்டுரையை எழுதிய சு.இராசவேல் அவர்கள்(நிகமம்-வணிக வரலாற்றாய்வுகள், தமிழ் பல்கலைக்கழக வெளியீடு, பக்: 13).
- அதே நூலில் சங்ககாலத் தமிழகத்தில் வெளி நாட்டு வணிகம் என்கிற கட்டுரையை எழுதிய மா.பவானி என்பவர், கி.மு. 500 ஆண்டுகளில் ஐரோப்பாவுடனான இந்திய வணிகத்தில் கிரேக்கர்கள் இடைத்தரகர்களாகச் செயல்பட்டனர் எனவும் பல நாடுகளுக்கு இடையிலான இப்பரிமாற்றத்தால் வணிகப்பண்டங்களின் தமிழ் பெயர்கள் கிரேக்க மொழியில் இடம் பெற்றுள்ளன எனவும் அரிசி, ஒரைஸ் ஆகவும் இஞ்சி, ஜிஞ்சிபெரோஸ் ஆகவும் கிரேக்க மொழியில் வழங்கப்பட்டது எனவும் ஐரோப்பாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்கள் அனைத்தும் கி.மு. 2ஆம் நூற்றாண்டு வரை பெரும்பாலும் உரோமுக்குச் செல்லாமல் கிரேக்கத்திற்கே சென்றன எனவும் அதன் பின்னரே அவை இரோமுக்கு நேரடியாகக் கொண்டு செல்லபட்டன(சீனிவாச ஐயங்கார். பி.டி., 1989 மு.சு.நூ) எனவும், கிரேக்கர்கள் தமிழகத்தோடு வணிகம் செய்ததற்கு அடையாளமாக கிரேக்க நாணயங்கள் பல தமிழகத்தில் கிடைத்துள்ளன(R. Krisnamurthy.R. 1994coins from Greek islands, Rhotes and Crete found at Karur Tamil Nadu studies in South India coins vol. 4.p. 95) எனவும் அவர் கூறியுள்ளார்.
- கிறித்துவ சகாப்தத்திற்கு 500 ஆண்டுகளுக்கு முன்னரே நறுமணப்பொருட்கள், சிறுத்தைப்புலி, தந்தம், நூலாடை, அரிசி முதலான பொருட்களை எகிப்தியர்கள் விரும்பி வாங்கினார்கள் எனவும் எகிப்தியர்களோடு தமிழர்கள் வணிகம் செய்ததற்குச் சான்றாக எகிப்தின் செங்கடல் துறைமுகங்களான குசிர் அல் குவாதிம், பெரனிகே ஆகிய இடங்களில் கி.மு. 1ஆம், கி.பி.1ஆம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த தமிழி எழுத்துப் பொறிப்புகள் உள்ள ஓடுகள் கிடைத்துள்ளன (சாதன், கணன், கொற்றப்பூமான், பனைஒறி என்கிற ‘ தமிழி’ பொறிப்பு ஓடுகள்) என்கிறார் அவர்(SOURCE: Iravatham Mahadevan, 2003, Early Tamil Epigraphy from the Earliest to the 6th Century A.D. Cre-A, Chennai p-16).
- மேலும் அவர், தமிழர்கள் கங்கையாறு கடலில் கலக்கிற துறைமுகத்தின் வழியாகக் கங்கையாற்றில் நுழைந்து பாடலிபுரம், காசி ஆகிய ஊர்களில் வணிகம் செய்துள்ளனர் என்பதை ‘ கங்கை வங்கம் போகுவர் கொல்லோ’ என்கிற நற்றினைப் பாடல்(189:5) வெளிப்படுத்துகிறது என்பதையும் சீனா, தாய்லாந்து, சாவகம் போன்ற கிழக்கத்திய நாடுகளோடும் தமிழர்கள் மிக நீண்ட காலம் முதல் வணிகம் புரிந்து வந்துள்ளனர் என்பதையும் தக்கச் சான்றுகளோடு கூறியுள்ளார். (நிகமம்-வணிக வரலாற்றாய்வுகள், தமிழ்ப் பல்கலைக் கழக வெளியீடு,பக்: 25-36).
சிலர் கேட்கலாம் வணிகத்தொடர்பு இருந்தது என்பதற்காக அவர்கள் இங்கே வாழ்ந்தார்கள் என எப்படிக்கூறுவது என்று! கடல் தாண்டி வருபவர்கள் வணிகம் செய்யும் நாடுகளில் தங்கி வணிகம் மேற்கொள்வர். தமிழர்களும் கூட இந்த மாதிரி வெவ்வேறு நாடுகளில் வணிகம் செய்து அங்கேயே தங்கியதுண்டு. அந்த இடம் சரியான இடமாக இருக்குமாயின் அங்கேயே தங்கிடுவர். உதாரணமாக இன்றைக்காலத்தில் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு சென்று அங்கேயே தங்கியவர்கள். பின்னர் அவர்களின் தலைமுறைகளும் அங்கேயே இருக்கும், இந்திய வம்சாவளியினர் எனும் பெயரில்…
ஒரு தமிழ்ப்பெண் கொரிய நாட்டின் அரசியாக போற்றப்படுவதாக செய்த்தித்தாளில் படித்த நியாபகம். வேறு விபரங்கள் தெரியவில்லை. தெரிந்தால் கூறுகிறேன்…
இந்த பதிவுகளையும் தொகுப்பை வழங்கிய மதிப்பிற்குரிய தோழரும் ,விலங்கியல் மாணவன் திரு.சாமுவேல் ஜோசப் ராஜ் அவர்களுக்கு மிக்க நன்றி !!!!!
No comments:
Post a Comment