Pages

Thursday, 25 January 2018

ஓமுவாமுவா (Oumuamua)



@இரு படங்கள்

ஓமுவாமுவா

ஓமுவாமுவா (Oumuamua)
(மக்களே! இது ஹாரிஸ் ஜெயராஜ் பாட்டல்ல 😃😃)

நீளமான குழாய்போன்ற வடிவத்தில் கிட்டத்தட்ட மனிதர்கள் புகைக்கும் சுருட்டுப்போல (Cigar), விண்வெளியில் இனம் தெரியாத பொருட்கள் மிகைவேகத்துடன் நகர்ந்து சென்றதாகப் பல வதந்திகள் கடந்த காலங்களில் உலா வந்ததுண்டு. ஒரு தடவை, விண்வெளியில் அமைந்திருக்கும், விண்வெளி ஆராய்ச்சி நிலையத்திலிருந்து கூட அப்படியானதொன்று கடந்து சென்றதை அவதானித்ததாகச் செய்தியுண்டு. ஆனால், அறிவியல் எப்போதும் தகுந்த ஆதாரம் இல்லாமல், நிரூபிக்க முடியாத எதையும் ஏற்றுக் கொள்வதில்லை. அதனால் இந்த வகையான ஏலியன் விண்கப்பல்கள் விசயத்தில் எப்போதும் பெரும்பாலான விஞ்ஞானிகள் இல்லையென்ற பக்கத்திலேயே இருந்து கொள்ளப் பார்ப்பார்கள். பிரபல அறிவியலாளரும், எனக்கு ரொம்பவும் பிடித்தவருமான, நீல் டி கிராஸ் டைசன்' (Neil de Grass Tyson) கூட வெளிக்கிரக ஜீவராசிகளின் வருகையை ஏற்றுக் கொள்வதில்லை. ஆனால், எப்போதும் பூமி தாண்டி வெளியே உயிரினங்கள் வாழ்கின்றன என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கையை வைத்திருக்கும் ஒருவர் இருக்கிறார். அவர் சாதாரணமானவர் கிடையாது. இன்று வாழ்ந்து கொண்டிருக்கும் கணித/இயற்பியல்/வானியல் விஞ்ஞானிகளில் மிகச்சிறந்த மேதையாகக் கருதப்படும் ஸ்டீஃபன் ஹாக்கிங்தான் அவர். ஏலியன்கள் பற்றிப் பலவிதமான கருத்துகளை அவர் சொல்லியிருக்கிறார். அவர் சொல்வதை மறுப்பதற்கு யாராலும் முடிவதில்லை. ஸ்டீஃபன் ஹாக்கிங்கும், மார்க் சுக்கெர்பேர்க்கும், உலக மகாக் கோடீஸ்வரர்களில் ஒருவருமாக, மூவர் ஒன்று சேர்ந்து 'அல்ஃபா செண்டாரி C' நட்சத்திரத்தில் இருக்கும் பூமி போன்ற கோளில் ஏலியனைத் தேட, மிகச்சிறிய நானோ விண்கலங்களைத் தயாரித்து அனுப்பும் திட்டமொன்றும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது இங்கு முக்கியமானது. வேற்றுக்கிரக உயிரின வசிப்பில் அவ்வளவு திடமான நம்பிக்கை ஹாக்கிங்கிற்கு உண்டு. "ஏலியன்களைத் தேடுவதாக நினைத்து, நம் பூமியை அவர்களுக்குக் காட்டிக் கொடுத்து விடாதீர்கள். அது மனித குலத்துக்கே பெரும் ஆபத்தாக முடியும்" என்று எச்சரிக்கைக் குரலில் ஹாக்கிங் அடிக்கடி சொல்வதும் உண்டு. இதே ஹாக்கிங்தான் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஒரு பிரமிக்கும் தகவலைச் சொல்லியிருக்கிறார். அது என்னவென்று புரிந்து கொள்ள, கடந்த ஒக்டோபர் 19ம் திகதி நடைபெற்ற ஒரு சம்பவத்தை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.  

2017ம் ஆண்டு ஒக்டோபர் 19ம் திகதியன்று, சூரியனுக்குச் சற்றுத் தொலைவில், மிக நீண்ட பொருளொன்று விரைந்து கடந்து செல்வதை 'Pan Starrs' தொலைநோக்கிக் கருவிகள் கண்டுபிடித்தன. Pan Starrs தொலைநோக்கிகள், விண்வெளியில் நகர்ந்து கொண்டிருக்கும் விண்கற்களைக் (அஸ்ட்ரோய்ட்) கண்டறிவதற்காகவே பயன்படுபவை. விரைவாகக் கடந்து சென்ற அந்த மர்மப் பொருளை, ஒரு விண்கல்லென்றே நினைத்தார்கள்.
ஆனால், விண்கற்களுக்கான எந்தத் தன்மையும் அதனிடம் காணப்படவில்லை என்பது பேராச்சரியம். வழமையான விண்கற்களின் செயற்பாடுகளில் எதையும் அது கொண்டிருக்காமல், புதுவிதமாக நகர்வுடன் பயணித்தது. முதலில் அதன் வடிவமே விண்கல்லொன்றின் வடிவத்தில் இருக்கவில்லை. நானூறு மீட்டர்களுக்கும் அதிகமான நீளமும், நாற்பது மீட்டர்களுக்கு அதிகமான அகலத்துடனும் அது காணப்பட்டது. இதுவரை விண்கற்கள் வட்ட வடிவமாகவோ, நீள்வட்ட வடிவமாகவோ, மிஞ்சிப் போனால் உருளைகிழங்கு வடிவிலோதான் இருந்திருக்கின்றன. ஆனால், இப்படியான நீண்ட குழாய் வடிவத்தில் முதன்முறையாக ஒன்று தெரிந்திருக்கிறது. அத்துடன், ஒரு விண்கல் விண்வெளியில் பயணிக்கும்போது, அதன் பின்னால் உறைந்த பனியின் உருகிய தூசுப் படலங்கள் பின்தொடர்வது வழக்கம். ஆனால், இதில் எந்தத் தூசுகளுமில்லாமல், தூய்மையான பொருளாக காணப்பட்டது. விண்கற்கள் எப்போதும் சாம்பல், கறுப்பு போன்ற குறிப்பிட்ட நிறங்களையே கொண்டிருப்பவை. இதுவோ, அவையெல்லாவற்றுக்கும் மாறாகச் சிவப்பு நிறத்தில் இருந்தது பேராச்சரியம். அதைவிட, விண்கற்களுக்கும் இதற்கும் இருந்த பெரும் வித்தியாசம், அதனுடைய வேகம். சாதாரண விண்கற்களைவிட மூன்று மடங்குக்கும் அதிகமான வேகத்துடன் அது நகர்ந்திருக்கிறது. அந்த வேகமானது சூரிய ஈர்ப்புவிசையிலிருந்து தப்பிச் செல்லக் கூடிய, விலகல் வேகத்துக்கும் (Escape Velocity) அதிகமான வேகத்துடன் இருந்ததுதான் இப்போது அதிகளவில் இதுபற்றிப் பேசுவதற்கு காரணமாக இருக்கிறது.

சூரிய ஈர்ப்புவிசைப் பரப்புக்குள் இலட்சக்கணக்கான விண்கற்கள் உலா வந்துகொண்டிருக்கின்றன. செவ்வாய்க்கும், வியாழனுக்கும் இடையே பல்லாயிரக் கணக்கான அஸ்ட்ரோய்ட்கள் ஒரு வட்டவடிவப் பட்டிபோன்று (Belt) காணப்படுகின்றன. இது தவிர்த்து நெப்டியூனுக்கு அப்பாலும் ஒரு மிகப்பெரிய அஸ்ட்ரோய்ட் பட்டி காணபப்டுகிறது. இந்த விண்கற்களையெல்லாம் விஞ்ஞானிகள் தினம் தினம் அவதானித்துக் கொண்டே வருகின்றனர். ஒரு தொலைநோக்கியால் அனைத்தையும் அவதானிக்க முடியாது என்பதால், பல தொலைநோக்கிகள், பல நாடுகளிலிருந்து பகுதி பகுதியாகப் பிரித்து, அவை அனைத்தும் அவதானிக்கப்படுகின்றன. காரணம், இவற்றில் ஏதாவது ஒன்றாவது பூமியுடன் மோதினால், பூமிக்கே ஆபத்து வரக்கூடும் என்பதால்தான். சூரிய விண்வெளிக்குள் இருக்கும் ஒவ்வொரு விண்கல்லும் அடையாளப்படுத்தப்பட்ட்டிருக்கிறது. அவையெல்லாம் பதிவுகளாகவும் இருக்கின்றன. அப்படி அவதானிக்கப்படும் இலட்சக்கணக்கான விண்கற்களில் ஒன்றாக, மேற்படி சொன்ன மர்ம விண்கல் இருக்கவில்லை. சூரியக் குடும்பத்தினுள்ளே முதன்முதலாக வருகை தந்த ஒன்றாகவே இதைப் பார்க்கின்றனர். அதனால், இந்த விண்கல்லிற்கு  ‘ஓமுவாமுவா’ (Oumuamua) என்று பெயரிட்டிருக்கிறார்கள். ஹவாய் மொழியில் இதற்கு, ‘தூரத்திலிருந்து தூதுவர்’ என்று அர்த்தமாகும். இந்தத் தூதுவர் யார் என்பதே இப்போது கேள்விக் குறியாகியிருக்கிறது.

இது சூரியக் குடும்பம் தாண்டி வேறு ஒரு நட்சத்திரத்திலிருந்து தற்செயலாக நுழைந்துவிட்ட விண்கல்தான் என்றும், இதுவும் சூரியக் குடும்பத்தில் உள்ளதுதான். ஆனால், வெகுவெகு தொலைவில் இருக்கிறது. ஒருமுறை சூரியனை அது சுற்றிவர இருபதாயிரத்துக்கு அதிக வருடங்கள் தேவை. அதன் சுற்றுவட்டப் பாதை அவ்வளவு பெரியது. அதனால்தான் நாம் அதை இதற்கு முன்னர் அவதானிக்க முடியவில்லை என்றும் சில விஞ்ஞானிகளால் காரணம் சொல்லப்படுகிறது. ஆனாலும், இவற்றிலெல்லாம் சமாதானமடையவில்லைப் பலர்.

இப்போது  அந்த ஓமுவாமுவா விண்கல் அல்ல, அது ஒரு ஏலியனின் விண்கப்பல்தான் என்ற குரல் ஸ்டீஃபன் ஹாக்கிங் இடமிருந்து எழுந்திருக்கிறது. விண்வெளிப் பிரயாணத்தினால் உடல்பகுதிகள் காயமடைந்த நிலையில் காணப்படும் ஒரு விண்கப்பலேதான் அதுவென்று அடித்துச் சொல்கிறார் அவர். அவர் இப்படிச் சொல்லிவிட்ட  'ஓமுவாமுவாவுக்கு ஒரு புதுப் பரிமாணம் கிடைத்திருப்பது நிஜம்.👍
அறிவியலின் தேடல் தொடரும்.
      "வலியே வலிமை"
-ஐய்யனார் (வால்வரின்).

No comments:

Post a Comment