Pages

Tuesday, 10 November 2020

மனிதன் குரங்கிலிருந்து வந்தானா என்ற புதிர் விளக்கம்.

 மனிதன் குரங்கிலிருந்து பரிணமித்தான் என்றால் குரங்கின் இரத்தமும் மனிதனின் இரத்தமும் ஏன் ஒத்துபோகவில்லை? மேலும் குரங்குகளுக்கும் இரத்த வகை கண்டறியப்பட்டுள்ளதா?

Rh factor என்று சொல்கிறோம் இல்லையா, அதன் விரிவாக்கம் 'Rhesus' தானே? மனித இரத்த வகைகளைப் பகுத்தறிந்த கார்ல் லாண்ட்ஸ்டீனர் தான் ரீசஸ் வகைக் குரங்குகளில் முதலில் இந்த Rh ஐயும் கண்டறிந்து கூறியுள்ளார். இதே காரணிகள் மனிதர்களிலும் காணப்பட, அவற்றுக்கு Rh positive அல்லது negative எனப் பெயரிட்டுள்ளனர்.

புறணி பேசும் ரீசஸ் குரங்குகள் (படம்: flickr-creative commons)

குரங்குகள் மட்டுமின்றி அனைத்து விலங்கினங்களிலும் இரத்த வகைகள் கண்டறியப்பட்டுள்ளன. முக்கியமாக, குரங்கினங்களில் மனிதர்களை ஒத்த A,B,O வகைகள் காணப்படுவதைக் கண்டறிந்துள்ளனர். ஆனால் அவை நூறு சதம் ஒன்றுபோல் இருப்பதில்லைை; அவசியமும் இல்லை! காரணம்: இரு சிற்றினங்களுக்கும் இடையே உள்ள வேறு பல மாறுபாடுகள்.

முதலில் ஒரு திருத்தம்:

மனிதர்கள் குரங்குகளிலிருந்து வரவில்லை. மாறாக, தற்காலக் குரங்குகளும் மனிதர்களும் ஒரே மூதாதையரிடமிருந்து பரிணமித்தவர்கள். மேலும் டார்வினும் இந்தக் கருத்தை முன்மொழியவில்லை! அவரது கருத்துகளை பொதுமக்களுக்கு எளிதில் விளக்கிச்சொல்லும் பொருட்டு பின்வந்தவர்கள் இந்தச்சொல்லாடலைக் கையாண்டனர் எனச் சொல்லப்படுகிறது.

இரண்டாவதாக, ஒரு கேள்வி:

தமிழிலிருந்து பிற திராவிட மொழிகள் பிரிந்ததாகச் சொல்கிறோம் இல்லையா? எனில், மலையாளத்திலிருந்து பிற மொழிச்சொற்களை நீக்கிவிட்டால் அம்மொழி தற்காலத் தமிழ் போன்று இருக்குமா? (கவனிக்க: தற்காலத் தமிழ்).

இல்லை என்றுதான் தோன்றுகிறது. ஏனெனில், இவை இரண்டும் தனித்தனியே கிளைத்தபின் பன்னூறு ஆண்டுகளைக் கடந்தாகிவிட்டது. இந்த இடைப்பட்ட காலத்தில் இரு மொழிகளும் (இனக்குழுக்களும் கூட) தனித்தனியே பல வேறுபாடுகளை அடைந்துவிட்டன.

இப்போ, மனிதர்களும் குரங்குளும் தோராயமாக 11 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் பிரிந்ததாக விக்கிபீடியா (Human evolutionary genetics - Wikipedia) சொல்கிறது. எவ்வளவு வேறுபாடுகள் நடந்திருக்க வேண்டும்!

என் தாத்தாக்களுக்கெல்லாம் தாத்தாவும் அவர்களின் தாத்தாவும் (படம்: flickr-creative commons)

[எனக்கு எப்போதும் மொழிகளின் பரிணாமமும் உயிரினங்களின் பரிணாமமும் ஒத்து இருப்பது போலவே தோன்றும். டார்வினின் கோட்பாடுகளை மொழிகளின் பரிணாமத்தை வைத்து எளிதில் விளக்க முடியும் என்றும் தோன்றும்…பார்க்கலாம்]

மூன்றாவதாக, முடிவுரை:

குரங்கினங்களுக்கும் மனிதர்களுக்கும் இரத்தங்கள் குறிப்பிடத்தக்க அளவில் ஒத்துதான் போகின்றன (Do primates have similar blood types to humans?). ஆனால், அவற்றின் அழிந்து வரும் நிலையைக் கருத்தில் கொண்டு குரங்குகளிடமிருந்து மனிதர்க்கு இரத்தம் மாற்றும் ஆய்வுகள் கருத்தில் கொள்ளப்படுவதில்லை. வேறொரு முக்கிய நபரிடமிருந்து எளிதாக இரத்தத்தை மாற்ற முடியும் என்று என்று பேசிக்கொள்கிறார்கள். அந்த நபர் யார் தெரியுமா? பன்றி தான் !!!! 


No comments:

Post a Comment