Pages

Monday, 9 November 2020

திருமங்கலயம் என்னும் தாலி மரபை உணர்த்தியவன் தமிழன்.


திருமணம் - என்ற உங்கள் கேள்வியிலேயே இதற்கான விடை உள்ளது.
மணம் என்ற சொல்லுக்கே 'மஞ்சள்நீர் ஆடுதல்' என்றுதான் பொருள்.
மண்ணுதல்- என்றால் நீராட்டுதல், அலங்கரித்தல்.
* மண்ணுநீர் = மஞ்சன நீர், மஞ்சள் நீர்.
* மண்ணுதல் = மணம் ; திருமணம்.
(
மண்ணுதல் - தமிழ் விக்சனரி).

இக்காலத்தில் மணமகனானவன் மணமகளின் கழுத்தில் தாலியைக் கட்டுவதே கல்யாணம் என ஆகிவிட்டது. ஆனால் சங்க காலத்தில் தாலியைக் குறித்த எந்தவித செய்திகளோ தரவுகளோ எங்கு தேடினாலும் கிடைக்காது.

சங்க காலத்தின் திருமணக் காட்சி பற்றிய பாடல் ஒன்று அகநானூற்றில் காணலாம்.... கீழ்க்கண்டவாறு -

" உச்சிக் குடத்தர், புத்து அகல் மண்டையர்,
பொது செய் கம்பலை முது செம் பெண்டிர்
முன்னவும் பின்னவும் முறை முறை தரத்தர
புதல்வற் பயந்த திதலை அவ் வயிற்று
வால் இழை மகளிர் நால்வர் கூடி
'கற்பினின் வழாஅ, நற்பல உதவிப்
பெற்றோன் பெட்கும் பிணையை அக!/ என நீரொடு சொரிந்த ஈர் இதழ் அலரி
பல் இருங் கதுப்பின் நெல்லொடு தயங்க வதுவை நல் மணம் கழிந்த பின்றை..."

மங்கல நிகழ்வைச் சார்ந்த பெண்கள் மணமகளிடம் - ' பெண்ணே! சொன்ன சொல் மாறாமல் எல்லோருக்கும் உதவி செய்து , கொண்டவன் விருப்பத்துக்கு தக்கவாறு நடக்க வேண்டுமென' வாழ்த்தி கூந்தலுக்கு மேலாக மஞ்சள் நீரைச் சொரிந்து , ஈரப் பூவிதழ்களையும், முளைப்பாலிகையையும்
நெல்லையும் சேர்த்துத் தூவிட...
கல்யாணம் முடிந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மொத்தத்தில் மஞ்சள் நீராட்டுவதும்,
பூ - நெல் சொரிவதும், முளைப்பாலிகையோடு - கூடியிருப்போர் வாழ்த்துவதும்தான் அந்தக் கால தமிழர் திருமணம் என தெளிவாக விவரிக்கிறது இப்பாடல்.

அகநானூற்றில் சொல்வது போல திருமணத்தில் மஞ்சள்நீர் ஆடும் சடங்கு இன்றைக்கும் நாட்டுப் புறங்களில் பல இடத்தும் (குறிப்பாக சிவகங்கைப் பக்கம்) முகன்மையாகத் தான் இருக்கிறது.

முத்தாய்ப்பாக சொல்வதென்றால். ..
" திருக்குட நீராட்டு என்பதே தமிழினத்தின் தொன்று தொட்ட பழக்கமென பழந்தமிழ் இலக்கியங்கள் மூலம் அறிய முடிகிறது. குடநீராட்டு நடப்பது நெடுநாள் மரபாய் இருந்திருக்கலாம் என்பதை நாம் உணர வேண்டும். வாழ்வினில் வெற்றி காண்கையில், நல்ல விடயங்களை எதிர் நோக்குகையில் , அவை கிட்டியபின் கொண்டாடுகையில் , தமிழருக்கு மஞ்சளும், மஞ்சள் நீரும் வாழ்வில் முக்கிய அங்கம் வகித்தன.

ஆண் பெண் இருவருக்கும் அவருடைய வாழ்க்கையின் தொடக்க நிகழ்வான
திருமணத்தின் பொழுது நடத்தப்பட்ட மஞ்சள் நீராட்டும் சடங்கு வழக்கொழிந்தாலும்...

பொங்கலையொட்டிய திருவிழாக்களில் மஞ்சள் நீர் ஊற்றுதலும்....

கோவில் கோபுரக் கலசங்களை குடமுழுக்கு என்ற பெயரில் மஞ்சள் நீராட்டுதலும்.. ( கும்பாபிஷேகம் )

பெண்கள் பூப்படைந்ததும் மஞ்சன நீர் சொரிதலும்.... ( மஞ்சள் நீராட்டு விழா )

ஆணுக்கு 60 அகவை முடியும் (மணிவிழா) நிகழ்வான அறுபதாங் கல்யாணத்தின் போதும் , 80 அகவை முடிந்த எண்பதாம் கல்யாணத்தின் போது கும்பம் சொரிதலும்....

மஞ்சள் நீராட்டுச் சடங்கை -தமிழர்களின் நெடுநாள் மரபான ... இந்த திருக்குட நீராட்டுதலை இன்றைக்கும் நாம் விடாமல் தொடர்ந்து வருகிறோம் என்பதை அறிய முடிகிறது.


இந்த பதிவுகளை வழங்கிய மதிப்பிற்குரிய தோழர் 

திரு. இரவீந்திரன் சிவன் ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி !!!! 



No comments:

Post a Comment