திருக்குறள் இயற்றப்பட்ட அசல் சுவடிகள் தற்பொழுது எங்கே உள்ளன?
திருவள்ளுவர் கைப்பட எழுதிய திருக்குறள் சுவடிகள் நமக்குத் தற்போது கிடைக்க எள்ளளவும் வாய்ப்பில்லை!
திருக்குறள் அசலானது ஓலைச்சுவடி கடந்த காலந்திலே உள்ளது.
திருக்குறளைத் திருவள்ளுவர் தம் கைப்பட எழுதினாரா?
(அவர்தான் இயற்றினார், அவரே எழுதினாரா? அவரது மாணவர்களைக் கொண்டும் எழுதியிருக்கலாம்!)
திருக்குறளை எழுதிய திருவள்ளுவர் ஒரே நபர்தானா?
(எனது கருத்து ‘ஆம்’ என்பதுதான். ஆனால், ‘இல்லை’ என்னும் சில அறிஞர்களும் / ஆய்வுகளும் உள்ளன(ர்)!)
திருக்குறளைத் திருவள்ளுவர் ஓலைச்சுவடியில்தான் எழுதியிருப்பாரா?
(ஆம்! அன்றைய காலகட்டத்தில் தமிழகத்தில் எழுதப் பயன்பட்ட பொருள்கள் மூன்று: பனையோலைகள், செப்புத்தகடுகள், & கற்பாறை. செப்புத்தகடுகளும், கற்பாறைகளும் பெரும்பான்மையும் அரசு தொடர்பான ஆவணங்களைப் பதிவு செய்யவே பயன்பட்டன. நூல்களை எழுத பனையோலைகள் மட்டுமே!)

(படம்: இன்றைக்குக் கிடைக்கும் திருக்குறள் சுவடிகளில் ஒன்றின் படி. அதிகளவாய் இதன் காலம் 300 ஆண்டுகளுக்கு முந்தையதாக மட்டுமே இருக்கும்! படமூலம்: தமிழ் இணையக் கல்விக் கழக வலைத்தளம்)
பனையோலைகள் நீண்டு நிலைக்கக் கூடியவை அல்ல!
நன்கு பராமரிக்கப்படும் நிலையில் பனையோலையின் வாழ்நாள் சுமார் 200 - 300 ஆண்டுகள்தான்.
நன்றாகப் புழக்கத்தில் இருக்கும் பனையோலைகள் 100 அல்லது 150 ஆண்டுகள் நீடிக்கும்!
எனவேதான், பனையோலைகளைப் படியெடுக்கும் தேவை ஏற்படுகிறது.
ஒருவர் மூலப் படியைப் படிக்க மாணவர்கள் சிலர் அதைக் கேட்டு எழுதிப் படியெடுப்பர். (இவ்வாறு கேட்டு எழுதும்போது சில பிழைகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம்! ஒரே நூலின் வெவ்வேறு படிகளில் வெவ்வேறாக இருக்கும் சொற்களை / பகுதிகளைப் ‘பாட பேதம்’ என்று குறிக்கின்றோம்! ’எழுதினவன் ஏட்டைக் கெடுத்தான்’ என்ற பழமொழியும் இதனால் ஏற்பட்டிருக்கலாம்!
‘வெண்பா இருகாலில் கல்லானை, வெள்ளோலை
கண்பார்க்கக் கையால் எழுதானைப் - பெண்பாவி
பெற்றாளே பெற்றாள் பிறர்நகைக்கப் பெற்றாளே
எற்றோமற் றெற்றோமற் றெற்று’
-என்ற ஔவையார் பாடலையும் காண்க!)
எனவே திருவள்ளுவர் தாமே திருக்குறளை ஓலைச்சுவடியில் எழுதியிருந்தாலும் அச்சுவடிகள் 100 - 200 ஆண்டுகள்வரை இருந்து பின் அழிந்திருக்கும்!
எனவே அவை நமக்குத் தற்போது கிடைக்க வாய்ப்பே இல்லை! (நம்மால் காலப் பயணம் செய்ய முடிந்தது என்றால் நாம் காலத்தில் பின்னோக்கிச் சென்று அவற்றைக் கொண்டு வரலாம்! இயன்றால் வள்ளுவரையும் தொல்காப்பியரையும் கையோடு இன்றைக்கு அழைத்து வந்துவிடலாம்! :-) )
சரி, திருவள்ளுவர் எழுதிய திருக்குறள் எப்படி இருக்கும்?
இன்றைக்கு நமக்குக் கிடைக்கும் கல்வெட்டுகளைக் கொண்டு நாம் பண்டைய தமிழ் எழுத்துவடிவை ஊகித்தறிகிறோம்.
கீழே நான் உருவாக்கிய மாதிரிகள்:

தமிழி எழுத்து - திருவள்ளுவர் இவ்வடிவில் எழுதியிருக்கத்தான் அதிக வாய்ப்புள்ளது!

இது தமிழி எழுத்திலிருந்து வளர்ச்சி பெற்ற ஒரு கிளை. இதனை வட்டெழுத்து என்கிறோம். தென்தமிழகத்தில் இது அதிகம் காணப்படுகிறது. திருவள்ளுவர் தமிழி எழுத்தில் எழுதவில்லை என்றால் அடுத்தபடியாக இவ்வெழுத்திற்குத்தான் வாய்ப்பு அதிகம்! (திருக்குறளின் உரைக்காரர்கள் இவ்வெழுத்தில் படித்தும் எழுதியும் இருக்க வாய்ப்பு அதிகம்!)

இது தமிழியிலிருந்து வளர்ந்த மற்றொரு கிளை. பல்லவர் - சோழர் மூலம் வளர்ந்த ‘தமிழ்’ எழுத்து.
சோழர்கள் (குறிப்பாய் முதலாம் இராசராசனும், முதலாம் இராசேந்திரனும்) மீண்டும் தமிழகத்தில் கோலோச்சத் தொடங்கிய பிறகு இவ்வெழுத்தே தமிழகமெங்கும் பரப்பட்டது. (இன்றைய தமிழ் எழுத்தும் இதிலிருந்து வளர்ந்து வந்ததே!)
No comments:
Post a Comment