Pages

Tuesday, 3 November 2020

Hello ஹாலோ என்ற ஆங்கில சொற்களுக்கு இணையான தமிழ் சொற்கள்.


எனக்கு பல நாள் சந்தேகம் .. என்னடா எமது மொழியில் ஒரு தொடர்பாடலின் தொடக்கத்தில் பேசுவதற்கு ஒரு சொல் இல்லையா?.. என்னடா இது எம்மொழிக்கு வந்த சோதனையென்று…. முடிவில் இந்தப் பெருங்குறை நேற்றுத்தான் தீர்ந்தது ஓர் நூலகத்தில் ! ..

அங்கு நான் வாசித்த பாவணரின் புத்ததகத்தில் இருந்த கட்டுரையில் இதற்கான தீர்வு கிடைத்தது... அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்..

கெலோவிற்கு (hello) மாற்றாக நாம் ஏற்கனவே வணக்கம் என்னும் சொல்லைப் பயன்படுத்தி வருகின்றோம்…. ஆனால் அது அவ்வளவு பொருத்தமானதாக இல்லை!

ஆகவே அதற்குப் பகரமாக எனக்கங்கு கிடைத்த பாவாணர் கண்டுபிடித்த சொல்லைப் பயன்படுத்தலாம்.. அச்சொல்,

  • Hello = எல்லா

முதலில் HELLOவிற்கு இணையான எல்லா என்னும் சொல் இலக்கியங்களில் எங்கெல்லாம் இடம்பெற்றுள்ளது என்று பார்ப்போம்:

தொல்காப்பியர் காலத்தில் தலைவனும் தலைவியும் ஒருவரை ஒருவர் விளிக்க எல்லா என்னும் சொல் வழங்கி வந்தது.

'முறைப்பெயர் மருங்கின் கெழுதலைப் பொதுப்பெயர்

நிலைக்குரி மரபின் இருவீற்றும் உரித்தே"

—பொருளியல் 230

என்கிறது தொல்காப்பியம். இதற்கான விளக்கம்,

→ " முறைப்பெயர் இடத்து இருபாற்கும் பொருந்தின தகுதியுடைய எல்லா என்னும் சொல் புல நெறி வழக்கிற்குரிய முறைமையினானே வழுவாகாது ஆண்பாற்கும் பெண்பாற்கும் உரியதாய் வழங்கும் என்றவாறு"

'கெழுதகை' என்றதனானே தலைவியும் தோழியும் தலைவனைக் கூறியதே பெரும்பான்மை என்றும் தலைவன் தலைவியையும் தோழியையும் கூறுதல் சிறுபான்மை வழுவமைதி என்றும் கொள்க.

"அதிர்வில் படிறெருக்கி வந்தென் மகன் மேல்

................

எதிர்வளி நின்றாய்நீ செல்

இனி யெல்லா"

— கலி 81

இது தலைவியைத் தலைவன் இழித்துக் கூறலின் வழுவாய் அமைந்தது.

" எல்லா நீ

...............

என்நீ பெறாததீ தென்"

—கலி 61

எனத் தோழி தலைவனை விளித்துக் கூறலின் வழுவாய் அமைந்தது.

"எல்லா விஃதொத்தென்"

—கலி 61

என்பது பெண்பால் மேல் வந்தது.. ஏனையவை வந்துழி காண்க. பொதுச் சொல் என்றதனானே எல்லா, எலா, எல்ல, எலுவ எனவும் கொள்க.

" எலுவ சிறாஅர்"

—குறுந் 129

என வந்தது.

"யாரை யெலுவ யாரோ"

—நற் 395

எனத் தலைவனைத் தோழி கூறினாள்.

"எலுவி என்பது பாலுணர்த்தலின் ஆராயப்படா" என்றுரைத்தார் நச்சினர்க்கினியார்.


ஏல் என்னும் சொல் எல் - எல்ல - எல்லா என்று திரிந்தது.

எல்ல என்னும் சொல் வழக்கிறந்தது.; இலக்கியமும் இறந்து பட்டது.

எல்லா என்னும் விளி இருபாற் பொதுப்பெயராக வந்ததெனினும் அதன் திரிபு நிலையில் எலுவன் என்னும் ஆண்பால் வடிவமும் எலுவி, எலுவை என்னும் பெண்பால் வடிவமும் தோன்றின.

எல்லா என்னும் சொல் இன்று தென்னாட்டில்

→ எலே என்று ஆண்பாலை விளிக்கவும்,

→ எலா, ஏழா/ஏழ என்று பெண்பாலை விளிக்கவும் (ஏழா -இச்சொல் அருகி விட்டது)

வழங்கி வருவதைக் காண்க...

பரவலான டோரிமான் என்னும் தொடரில் ஜியோனின் அம்மா அவனை அழைக்க,

'எலே எங்கலே சுத்திற்ரிருந்தா இவ்வளவு நேரமா' …. என்று அழைப்பதை காண்க!

ஏழு என்னும் சொல் கீழ்க்கண்டவாறு திரிந்தது,

  1. ஏடன் - தோழன்
  2. ஏடி - தோழி
  • ஏடன் என்னும் சொல் ஏட, ஏடா, ஏடே என்றும், அட, அடா, அடே என்று ஆண்பால் விளியாகவும்
  • ஏடி என்னும் சொல் ஏடி, அடி, அடீ என்று பெண்பால் விளியாகவும்

தமிழ் கூறும் நல்லுலகெங்கிலும் வழங்கின்றது. மேலும் அங்கெல்லாம் வரும் அடடா, அடடே என்பன அடுக்குமொழிகள்.

அடா என்பது அரா ரா என்றும் அடே என்பது அரே ரே என்றும் இன்று தெலுங்கு மொழியில் வழங்கி வருவது காண்க.. இவற்றுள் ரா, ரே என்பவை இந்தி ,உருதுவிலும் வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சரி இதையெப்படி தற்காலத்கிற்கேற்ப எந்த இலக்கணச் சிக்கலும் இல்லாமல் வழங்குவது ?

ம்ம்ம்ம்...

இதோ இப்படி வழங்கலாம்! :-

இப்படி மேன்மக்களை விளிக்கும் சொல்லாக இருந்த அதாவது எலே/ஏலே என்னும் சொல் இன்று பலரின் ஆழ் மனதில் இழி சொல்லாகிவிட்ட நிலையில் இதன் மூல வடிவமான எல்லா என்னும் சொல்லை எடுத்து நாம் hello என்னும் ஆங்கிலச் சொல்லுக்கு நிகராக எம்மொழியில் வழங்கலாம் என்பது என் முடிபு!

எல்லாஆ.. யாருங்க வேணும்?

ஏன்டா அறிவுகெட்ட முண்டம்... எல்லா என்ட சொல்ல கண்டுபுடிச்சிருக்காங்களாம்.. ஏதாவது சொன்னியாடா?

அம்மம்ம்….


பிற்சேர்க்கை 

உங்களுக்கு எல்லா என்னும் சொல்லைப் பயன்படுத்துவதில் ஏதேனும் சிக்கல் இருந்தால் ' எல்ல ' என்னும் அதன் திரிபுச் சொல்லினைப் பயன்படுத்தலாம்!

எ.கா:

  1. எல்ல, எப்பிடி இருக்கிறியள்?
  2. எல்ல எப்பிடி இருக்கிறீங்கள்?
  3. எல்ல, எப்டி இருக்கீங்க?

No comments:

Post a Comment